மத்திய அரசுடன் 29ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த டெல்லி விவசாயிகள் சங்கம் சம்மதம்
மத்திய அரசுடன் வரும் 29ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்காக மத்திய அரசுக்கு சில நிபந்தனைகளையும் விவசாயிகள் சங்கத்தினர் விதித்துள்ளனர்.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை மத்திய அரசு முதலில் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. சில நாட்களில் போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்று விடுவார்கள் என்று மத்திய அரசு கருதியது.
ஆனால் நாள் செல்லச் செல்ல போராட்டத்தின் தீவிரம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. நாளுக்கு நாள் விவசாயிகள் சங்கத்தினருக்கு ஆதரவு அதிகரித்து வந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் மத்திய அரசு விவசாயிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. புதிய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் சங்கத்தினர் உறுதியாக இருந்தனர். ஆனால் வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு கூறி வந்தது. இதையடுத்து இதுவரை போராட்டம் முடிவுக்கு வராமல் உள்ளது.
இந்நிலையில் மீண்டும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதற்கிடையே பிரதமர் மோடி விவசாயிகள் சங்கத்தினருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத் திட்டங்களை வழங்குவதாக அவர் உறுதியளித்தார். விவசாயிகள் சங்கத்தினரை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் வரும் 29ம் தேதி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். இன்று விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளனர். இதுவரை பேச்சுவார்த்தைக்கு முன் மத்திய அரசு தான் நிபந்தனைகளை விதித்து வந்தது. ஆனால் இம்முறை விவசாயிகள் சங்கத்தினர் 4 நிபந்தனைகளை மத்திய அரசுக்கு விதித்துள்ளனர். புதிய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், ஆதரவு விலை நிர்ணயம் உட்பட 4 நிபந்தனைகளை மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கத்தினர் விதித்துள்ளனர்.