குளிர்காலத்தில் போதுமான நீர் அருந்துவது எப்படி?
உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து எப்போதும் இருக்கவேண்டும். வெயில் காலத்தில் தண்ணீர் அதிகமாக அருந்துவோம். ஆனால், குளிர்காலங்களில் நீர் அருந்துவதில் நாட்டம் இருக்காது. தட்பவெப்பநிலை காரணமாக நீர் அருந்துவதில் பிரியமும் இருக்காது. ஆனால், நீர் அருந்தாவிட்டால் உடலில் பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படக்கூடும். குளிர்காலத்தில் நீர் அருந்துவதில் விருப்பமுண்டாக, அதனுடன் சில பொருள்களை சேர்க்கலாம். அவை நீருடன் இன்னும் சில நன்மைகளையும் உடலுக்கு அளிக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சையை நீரில் சேர்ப்பதால் வைட்டமின் சி சத்து உடலில் சேரும். வைரஸ் தொற்று மற்றும் தொண்டை புண்களை இது தடுக்கும்.
இஞ்சி
இஞ்சிக்கு அழற்சியை தடுக்கும் ஆற்றல் உண்டு. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
புதினா தழை
நீரில் புதினா இலைகளை சேர்த்து அருந்தினால் செரிமானம் தூண்டப்படும். மன அழுத்தத்தை குறைக்கும். விழிப்புணர்ச்சியையும் புத்துணர்வையும் அளிக்கும்.
மிளகு
மிளகை பொடித்து நீரில் சேர்த்து அருந்தலாம். இது உடல் எடையை குறைக்க உதவும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றும். சிறுகுடலை சுத்தமாக்கும். இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவும். இதய துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் சீராக்கும்.
கடல் உப்பு
கடல் உப்பில் சோடியம் குளோரைடு அதிகமாக காணப்படும். இது உடலிலுள்ள திரவத்தின் அளவை சீராக காத்துக்கொள்ள உதவும். நவீன சுத்திகரிப்பு செய்யப்படாததால் கடல் உப்பில் சில பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புகள் இருக்கும்
நம் உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. உடலின் திசுக்களும், உறுப்புகளும் நீரால் உருவாக்கப்பட்டிருப்பதால் ஆரோக்கியத்திற்கு நீர்ச்சத்து அவசியம். ஆகவே, இவற்றை நீரில் சேர்த்தால் சுவை கொடுப்பதோடு, சத்துகளும் உடலில் சேரும்