இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர்... போனில் அழைத்து பாராட்டிய நடிகர்..!

இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்ற சாதனை படைத்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனை பிரபல நடிகர் மோகன்லால் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. இதில் திருவனந்தபுரம் உட்பட 5 மாநகராட்சிகளையும் இடதுசாரி கூட்டணி கைப்பற்றியது.

இந்நிலையில் திருவனந்தபுரம் மாநகர மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஆர்யா ராஜேந்திரனை மேயராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மேயர் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமை ஆர்யாவுக்கு கிடைத்துள்ளது. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இது தவிர இந்திய மாணவர் கூட்டமைப்பின் திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார்.ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகள் என்ற வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது வீடு பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் வீட்டுக்கு மிக அருகில் உள்ளது. இந்நிலையில் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்யா ராஜேந்திரனை இன்று நடிகர் மோகன்லால் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இவ்வளவு குறைந்த வயதில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார்.

திருவனந்த நகரை மேலும் அழகான நகராக மாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டுமென்றும், அதற்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் அவர் ஆர்யா ராஜேந்திரனிடம் கூறினார். நடிகர் மோகன்லால் தன்னை அழைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஆர்யா ராஜேந்திரன் கூறினார்.

More News >>