குண்டுவெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது.. நாஷ்வில்லே காவல்துறை தகவல்!
கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்திலுள்ள நாஷ்வில்லே நகரில் குடியிருப்புப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. குண்டு வெடிப்புச் சம்பவத்தால், நாஷ்வில்லே பகுதி முழுவதையும் கரும்புகை சூழ்ந்தது. குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
மேலும், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தின் கட்டடம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் தொலைத் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டது. இதனால், அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் நாஷ்வில்லே சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இன்று மாலை மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குண்டு வெடிப்பு தொடர்பான வெளியான வீடியோவில், இன்னும் 15 நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கும். இதை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால், இப்போதே வெளியேறுங்கள் என்று ஆடியோ உள்ளது. அதற்கு பின்தான் கார் இருந்த வெடிகுண்டு வெடித்திருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு விசாரணை ஏஜென்சிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.