இரட்டை இலை சின்னத்தை முடக்க சதியா... அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்வது என்ன?!

இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதிசெய்கிறார்கள் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மேடையில் பேசியுள்ளது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காக, அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, விருத்தாசலத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அவர் கூறுகையில், இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதி செய்கிறார்கள். தலைவர்கள் சிலர் ஏமாற்றலாம். தொண்டர்கள் ஏமாற்றமாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார். எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு இரட்டை இலை சின்னம். எம்.ஜி.ஆரின் வாரிசு என்று யாரும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்த தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா என்ற தேர்தல். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இல்லாத நிலையில் சந்திக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தப்பின் அதிமுக இரண்டாக பிரிந்து, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்தப்பின்னர் இரட்டை இலை சின்னம் மீண்டும் மீட்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரின் பேச்சு அதிமுகவின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>