இங்கிலாந்தில் இருந்து வந்த 10 பேருக்கு கொரோனா.. சிகிச்சையில் 9 ஆயிரம் பேர்..
இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது புதிய வகை கொரோனா தொற்றா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனாலும், இப்போது தினமும் ஆயிரம் பேருக்கு குறையாமல் தொற்று பரவி வருகிறது. தமிழக அரசு நேற்று(டிச.26) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1019 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.
இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 13,161 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1098 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 91,063 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 11 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,059 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9039 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். சென்னை(295 பேர்), கோவை(93பேர்), செங்கல்பட்டு(78பேர்), திருவள்ளூர்(53), சேலம்(59) மாவட்டங்களில் மட்டும் நேற்று 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.
சென்னையில் இது வரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கும், கோவையில் 52 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டில் 49 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று 64 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் ஆயிரம் பேருக்குத்தான் தொற்று பாதிப்பு உறுதியானது. அதனால் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அதே சமயம், இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு வந்த 4 பேர், தஞ்சாவூருக்கு வந்த 3 பேர் மற்றும் நீலகிரி, தேனி, மதுரை மாவட்டங்களுக்கு வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் நோயா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.