கபாலி இயக்குனர் மார்கழியில் அறிமுகம் செய்த கானா
மார்கழி என்றாலே கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி பிரபலம் பல சபாக்களில் கர்நாடக இசை பாடகர், பாடகிகள் நிகழ்ச்சி நடக்கும். தற்போது மார்கழியில் கானா இசையை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித். இதுபற்றிய விவரம் வருமாறு: கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் 3-ஆம் நாளான நேற்று பாடகர்கள் சிந்தை ரேவ் ரவி, கானா புண்ணியர், அந்தோனி போன்ற மூத்த பாடகர்கள் மற்றும் புள்ளிங்கோ ஸ்டீபன், கானா நித்யா ஆகியோர் கலந்துகொண்டு பாடல்களை பாடினர். நியூட்டன் குழுவினரின் துடும்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இசையமைப்பாளர் டி.இமான், நடிகர்கள் கலையரசன், ரித்விகா, நடன இயக்குனர் சாண்டி ஆகியோர் கலந்து கொண்டு இசை கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள். அதன்பிறகு பேசிய டி.இமான், மார்கழியில் மக்களிசை எனும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த இயக்குனர் பா.இரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக தி.நகரில் உள்ள இந்த சபாவில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மேடையில் பாடியவர்களுடன் விரைவில் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறினார். இந்நிகழ்ச்சியின் மேடையில் சென்னையில் உள்ள பூர்வகுடிகளின் வீடுகளை இடிக்கும் மாநகராட்சியின் செயலை குறிக்கும் வகையில் செட் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.