கோவை போத்தனூரில் விடிய விடிய போராட்டம்
கோவை போத்தனூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை போத்தனூரில் குடியிருப்பு பகுதியின் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை குழந்தைகள் விளையாடுவதற்கும், நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த இடத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி துவங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் மக்கள் மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் கடந்த இரு நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் , கழிவு நீர் சுத்தகரிப்பு தொட்டி அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இதில் கண்டித்து அப்பகுதி மக்கள் பணிகள் நடைபெறும் இடத்தில் நேற்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டம் நள்ளிரவு வரை தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகளை கைது செய்வோம் என காவல்துறையினர் எச்சரித்தனர். குடியிருப்புவாசிகளை செல்ல மறுத்த நிலையில் அவர்களை கட்டாயப்படுத்தி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.