குளிர்காலத்தில் உடல் நலத்தை காக்க உதவும் ஜூஸ் எது தெரியுமா?
குளிர்காலத்தில் பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. எந்த நோய்தொற்றாக இருந்தாலும் அது உடலுக்கும், அன்றாட பணிகளுக்கும் சிரமத்தை அளிக்கும். இந்தப் பருவத்தில் கிடைக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்தை காத்துக்கொள்வதற்கு உதவும். குளிர் காலத்தில் நோய்கள் நம்மை அண்டாமல் காத்துக்கொள்வதற்கு காரட் - இஞ்சி இவை சேர்ந்த ஜூஸை குடிக்கலாம்.காரட் குளிர்காலத்திற்கு ஏற்ற காய்கறி. இதில் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) உள்ளன. இவை உடல் செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் நிலையற்ற அணுக்களுக்கு (ஃப்ரீ ராடிகல்ஸ்) எதிராக செயல்படக்கூடியது. வைட்டமின் சியும் இதில் உள்ளது. ஆகவே, காரட் நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக்கூடியதாகும்.
இஞ்சிகுளிர்காலத்தில் சளி, இருமல் மற்றும் அது சார்ந்த ஃப்ளூ என்னும் பாதிப்பு வரக்கூடும். இவை உடலை தாக்கினால் உடல் சோர்வுறும். இயல்பான பணிகளை செய்ய இயலாது. இவற்றை தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. இந்த ஆரோக்கிய குறைபாடுகள் அழற்சியுடன் தொடர்புடையவை. ஆகவே, அழற்சியை தடுத்தால் இவற்றையும் தடுக்கலாம். இஞ்சிக்கு அழற்சியை தடுக்கும் ஆற்றல் (anti-inflammatory) உள்ளது.
காரட் - இஞ்சி சாறு (ஜூஸ்) தயாரிப்பது எவ்வாறு?சளி, தொண்டை வலி போன்ற உபாதைகளை தடுப்பதற்கு காரட் - இஞ்சி ஜூஸ் உதவும். 1 காரட்டை கழுவி, தோல் சீவி பின்னர் நறுக்கிக்கொள்ளவும். சிறிய துண்டு இஞ்சியை எடுத்து துவைக்கவும் (நசுக்கவும்). அரை தேக்கரண்டி அளவு கறுப்பு மிளகு எடுத்துக்கொள்ளவும். 1 எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் (blender) போட்டு கலக்கவும். எளிதாக குடிக்கும் பதம் வரும் வரை அடிக்கவும். பின்னர் வடிகட்டி அருந்தலாம். சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம். அது தொண்டை வலிக்கு இதமாக இருக்கும்.