இந்தியாவிலேயே வயது குறைந்தவர் திருவனந்தபுரம் நகர மேயராக ஆர்யா இன்று தேர்வு
இந்தியாவிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெருமையுடன் 21 வயதான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா இன்று மேயராக தேர்வு செய்யப்படுகிறார். காலை 11 மணிக்கு மேயர் தேர்தல் நடைபெறுகிறது.கேரளாவில் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெருவாரியான வார்டுகளில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் ஐந்திலும் இடது முன்னணி தான் வெற்றி பெற்றது.
திருவனந்தபுரம் மாநகராட்சியிலும் இடது முன்னணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் கடந்த முறை 43 வார்டுகளில் மட்டுமே இடது முன்னணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இம்முறை அதைவிட கூடுதலாக 9 வார்டுகளில் வெற்றி பெற்று மொத்தம் 52 வார்டுகளை கைப்பற்றியது. இந்த முறை நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேயர் வேட்பாளராக சிலரை முன்னிறுத்தி இருந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் தேர்தலில் தோல்வி அடைந்தனர். இதையடுத்து யாரை மேயராக தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் 47 வது வார்டில் போட்டியிட்ட 21 வயதான கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரனை மேயராக்குவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அதிரடியாகத் தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று காலை 11 மணிக்குக் கேரளாவில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஆர்யா ராஜேந்திரன் மேயராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெருமை கிடைக்கும். இதற்கிடையே ஆர்யா ராஜேந்திரன் மேயர் ஆவது குறித்து அறிந்ததும் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அவருக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார். மோகன்லாலின் வீட்டுக்கு அருகே தான் ஆர்யா ராஜேந்திரன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.