புதிய இந்தியாவை உருவாக்கும் பாஜக கீரி, பாம்பு, நாய், பூனை என பேசுகிறது! - மாயாவதி
கீரி - பாம்பு, நாய் - பூனை என பேசியிருப்பதன் மூலம் பாஜக தரம் தாழ்ந்து விட்டதையே உணர்த்துகிறது. இத்தகைய கீழ்த்தரமான மொழியின் மூலம்தான் பாஜக புதிய இந்தியாவை உருவாக்குமா? என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “உத்தரப் பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி, அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
பாஜக-வுக்கு எதிரான சூழல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த உண்மை நிலையை ஊடகங்கள் சில மறைக்கப் பார்க்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், மும்பை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா “எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என பிரச்சாரம் நடக்கிறது. பெருவெள்ளம் ஏற்படும்போது பாம்புகளும் கீரிகளும் பூனைகளும் நாய்களும், சிங்கம், புலிகளும் மரத்தின் மீது ஏறிக்கொண்டு, உயரும் நீர்மட்டத்தை பார்த்து அஞ்சும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு, அமித்ஷாவுக்கு நேரடியாக கண்டனக் கடிதத்தையும் மாயாவதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “சங்கிகளின் இழிவான மொழிக்கு உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் மக்கள் பாடம் கற்பித்து விட்டனர். கோரக்பூர், பூல்பூர் இடைத் தேர்தல்களுக்கு முன், இப்படித்தான் சங்கிகளின் மொழியை ஆதித்யநாத் பயன்படுத்தினார்; அதற்கு நல்ல பாடம் புகட்டப்பட்டு விட்டது.
இப்போது நீங்கள் எதிர்க் கட்சியினரை, கீரி - பாம்பு, நாய் - பூனை என்று ஒப்பிட்டுப் பேசியிருக்கிறீர்கள். உங்களின் இந்த பேச்சு மூலம் பாஜக தலைமை தரம் தாழ்ந்து விட்டதையே உணர்த்துகிறது. இத்தகைய கீழ்த்தரமான மொழியின் மூலம்தான் பாஜக புதிய இந்தியாவை உருவாக்குமா? இந்திய தேசத்தை ஆளும் கட்சிக்கு இதுதான் அழகா?”என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com