ஆஞ்சநேயர் அவதரித்தது திருப்பதியிலா ? ஆய்வு நடத்த ஆயத்தம்

திருப்பதியில் சேஷாச்சல மலைத்தொடரில் தான் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய ஏழு மலைகள் இந்த தொடரில் உள்ளது. ஆகவே தான் இந்த மலைப்பகுதிக்கு ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது. ஏழு மலைகளைக் கொண்ட இந்தப் பகுதியில் மகாவிஷ்ணுவின் கலியுக அவதாரமாக வெங்கடேஸ்வரா சுவாமி எழுந்தருளியதால் அவருக்கு ஏழுமலையான் என்ற பெயரும் வந்தது.

திருமலையில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் ஆஞ்சநேயரின் தாயான அஞ்சனா தேவி நீண்ட காலம் கடுந்தவமிருந்து பாபநாசம் செல்லும் சாலையில் இருக்கும் ஆகாச கங்கையில் நீராடி அதன் பயனாக ஜபாலி என்னும் இடத்தில் ஆஞ்சநேயரைப் பெற்றெடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே ஆஞ்சனாத்திரி மலையில் பக்தர்கள் பாத யாத்திரை செல்லும் பகுதியில் மிகப்பெரிய ஆஞ்சனேயர் சிலை வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜபாலி தீர்த்தத்திலும் ஒரு ஆஞ்சனேயர் கோயில் உள்ளது.எனவே திருமலையில் உள்ள அஞ்சனாத்திரி மலை ஜபாலியில் ஆஞ்சநேயர் அவதரித்தாரா என்று ஆய்வு மேற்கொள்ளுமாறு தேவஸ்தான நிர்வாகம் கோயில் ஆகம ஆலோசனை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த ஆய்வின் மூலம் ஆஞ்சநேயரின் அவதார திருத்தலம் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலை என்று உறுதி செய்யப்பட்டால் திருமலையின் பெருமை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு .

ஆஞ்சநேயரின் அவதார திருத்தலம் மலையிலுள்ள அஞ்சனாத்திரி மலைதான் என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அங்கு ஆஞ்சநேயருக்கு மிகப் பிரம்மாண்டமான கோவிலைக் கட்ட தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.ராமபிரானுக்கு அவருடைய அவதார திருத்தலமான அயோத்தியில் பிரம்மாண்டமான கோயில் கட்ட பணிகள் துவங்கி இருப்பதைத் தொடர்ந்து, ஆஞ்சனேயருக்கும் அவதார திருத்தலத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

More News >>