தரமான பாக்சிங் டே சதம்... ரஹானேவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் செயல்பாடு பாராட்டுகளை பெற்று வருகிறது. குறிப்பாக கேப்டன் ரஹானேவின் செயல்பாடு பாராட்டுகளை பெற்று வருகிறது. போட்டி தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அஷ்வினை பந்துவீச அழைத்தது ரஹானேவின் கேப்டன்சியை பறைசாற்றும் வகையில் அமைந்தது. இதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. ஆபத்துமிக்க ஸ்மித்தை ஒரு ரன்கூட எடுக்க விடாமல் அவுட் ஆக்கினார் அஸ்வின்.

இதேபோல் பேட்டிங்கிலும் ரஹானே ஜொலித்தார். ஆஸ்திரேலியா பௌலிங்கை சமாளித்து சதம் அடித்து அசத்தினார். சதமடித்ததன் மூலம் கேப்டன் ரஹானே மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். இந்த நூற்றாண்டில் மெல்பேர்ன் மைதானத்தில் சதமடிக்கும் முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த 1999ல் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தபோது தான் கடைசியாக இந்த மைதானத்தில் சதம் அடித்தார். அதன் பிறகு இந்திய கேப்டன் ஒருவர் மெல்பேர்ன் மைதானத்தில் சதம் அடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஷேன் வார்னே ``கிரிக்கெட்டில் அடிக்கப்படும் நூற்றுக்கணக்கான சதங்களில் இதுவும் ஒன்று என ரஹானேவின் சதத்தை கடந்துவிட முடியாது. பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சதங்களில் இதுவும் ஒன்று. உலகத் தரமான பௌலிங், மைதானத்தின் தன்மை, விளையாட்டின் போக்கு என அனைத்துடனும் போரிட்டு ரஹானே எடுத்த சதம் இது. இதற்கு மேல் இது ஏன் சிறப்பான சதம் என என்னால் விவரிக்க முடியாது. ஆனால் இது ஒரு தரமான சதம் என்பது மட்டும் நான் சொல்லியே ஆக வேண்டும்" என நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

More News >>