அப்போது கோ கொரோனா.. இப்போது நோ கொரோனா.. மத்திய அமைச்சர் மீண்டும் காமெடி!
இந்தியாவில் கொரோனா நோய் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் அந்த நோயை விரட்டுவதற்காக பலரும் பல நூதனமான வழிமுறைகளை கையாண்டனர். வீட்டில் இருந்த பாத்திரங்களை எடுத்து தட்டுவது, மணி அடிப்பது, விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றுவது என பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டன. மத்திய அமைச்சர் ஒருவர் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் மும்பை இந்தியா கேட் முன் நின்று ஆட்களை திரட்டி 'கோ கொரோனா கோ கொரோனா' என கோஷமிட்டார். மத்திய அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் ராம்தாஸ் அதவாலே தான் இந்த வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அமைச்சர் ராம்தாசின் இந்த நடவடிக்கையை பலரும் கிண்டல் செய்த போதிலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை.
அமைச்சரின் இந்த 'கோ கொரோனா' வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாக பரவியது. வெளிநாட்டினர் கூட தன்னுடைய மந்திரத்தை கூறி கொரோனாவை விரட்டி வருகின்றனர் என்று பின்னர் அமைச்சர் ராம்தாஸ் கூறினார். இப்படி கூறிய சில நாட்களில் அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவுக்கும் கொரோனா நோய் பரவியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து ராம்தாஸ் அத்வாலே அடித்துள்ள கமெண்ட் மீண்டும் இணையங்களில் வைரலாகி வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து, ``இதற்கு முன் `கோ கொரோனா; கொரோனா கோ' எனக் கூறினேன் கொரோனா போய்விட்டது. இப்போது மீண்டும் புதிய கொரோனா வந்துள்ளது. அதனால் 'நோ கொரோனா' `கொரோனா நோ என கோஷமிடுங்கள். இதுவும் போய்விடும்" எனக் கூறியுள்ளார் ராம்தாஸ் அத்வாலே.