பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக முடிவு.. பாஜக-ஜேடியு கூட்டணியில் விரிசல்..

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். அவரை நாங்கள்தான் கட்டாயப்படுத்தி முதல்வராக பொறுப்பேற்க வைத்தோம் என்று பாஜக கூறியிருக்கிறது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணியில் இருந்து சிராக் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி விலகினாலும், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தது. அதே சமயம், ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து போட்டியிட்டது. நிதிஷ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்காமல் தடுக்கச் செய்யும் பாஜகவின் சூழ்ச்சி இது என்று அப்போதே பேசப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) 43 தொகுதிகளிலும் வென்றன. ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தாலும், அக்கட்சித் தலைவர் நிதிஷ்குமாரே மீண்டும் முதலமைச்சர் என்று பாஜக அறிவித்து, அதன்படி அவர் பதவியேற்றிருந்தார்.

எனினும், நிதிஷ்குமாருக்கு பாஜக ஆதரவுடன் முதல்வர் பதவியில் நீடிப்பது பிடிக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அருணாசலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 7 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பாஜகவுக்கு தாவினர். இது பற்றி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் தியாகி கூறுகையில், அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் இருந்து 15 ஆண்டுகளாக கடைபிடித்து வந்த கூட்டணி தர்மத்தை பாஜக காப்பாற்றியிருக்க வேண்டும். இப்படி செய்வது சரியல்ல என்று குற்றம்சாட்டினார்.இதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது: தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, நான் முதல்வராக நீடிக்க விரும்பவில்லை என்று பாஜகவினரிடம் தெரிவித்தேன். மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன். அதனால், பாஜகவில் இருந்து வேண்டுமானால் முதல்வரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று மறுத்தேன். ஆனால், பாஜகவினர் என்னை கட்டாயப்படுத்தி முதல்வராக பொறுப்பேற்கச் செய்தனர்.

எனக்கு முதல்வர் பதவியில் நீடிக்க விருப்பமே இல்லை. இவ்வாறு நிதிஷ்குமார் பேசியுள்ளார். இது பற்றி, முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி கூறுகையில், தேர்தல் முடிவுகளை பார்த்த பின்பு நிதிஷ்குமார் முதல்வராக விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஆனால், நாங்களும் மற்ற கட்சிகளும் இணைந்து அவரை முதல்வராக பொறுப்பேற்க வைத்தோம். அவரது தலைமையில்தான் தேர்தலை சந்தித்தோம். அதனால், அவரையே முதல்வராக நீடிக்கச் செய்தோம் என்றார். தற்போது பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளது. எனவே, நிதிஷ்குமார் எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என்று கூறப்படுகிறது. தீவிர அரசியலில் இருந்து விலகவும் நிதிஷ்குமார் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான், தனது கட்சியின் தலைவராக ஆர்.பி.சிங்கை தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News >>