கொரோனா தடுப்பூசி 4 மாநிலங்களில் இன்று ஒத்திகை
அசாம், ஆந்திரா உட்பட 4 மாநிலங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த ஆய்வுகள் அனைத்திலும் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு சில மாதங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக ஒத்திகை பார்க்க தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி இன்றும், நாளையும் ஆந்திரா, அசாம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் ஒத்திகை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
வழக்கமாக தடுப்பூசி போடும் போது கிராமங்கள் உட்பட பகுதிகளில் போதுமான வசதிகள் இருக்காது. இதனால் பல பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் வந்தன. இதையடுத்து இந்த புகார்களை தவிர்ப்பதற்காகவே ஒத்திகை பார்க்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இன்று இந்த மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. இந்த 4 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா 2 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றில் ஒத்திகை நடைபெற்று வருகிறது.
இரண்டு நாள் ஒத்திகைக்க்குப் பின்னர் அது தொடர்பான விவரங்களை மாவட்ட சுகாதார அதிகாரிகள் அரசுக்கு அளிப்பார்கள். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தடுப்பூசி போடும்போது அந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். இதற்கிடையே இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,021 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 279 பேர் மரணமடைந்தனர். 21,131 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 1.02 கோடி பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 2.77 லட்சம் பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.