பரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள்
மெல்பர்ன் கிரிக்கெட் டெஸ்ட் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியா இந்தியாவை விட 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில் மெல்பர்னில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பவுலர்களின் அபார பந்துவீச்சால் 195 ரன்களில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் எந்த வீரரும் அரைசதத்தைக் கூட கடக்கவில்லை. இதன் பின்னர் இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்சை தொடங்கியது.
கேப்டன் ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியா 326 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்தியா 131 ரன்கள் முன்னிலை பெற்றது. கேப்டன் ரஹானே சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் இது அவருடைய 12வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2வது சதமாகும். ரஹானே 112 ரன்களில் ரன் அவுட்டானார். ஜடேஜா 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஆடவந்த இந்திய வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை. இதன் பின்னர் ஆஸ்திரேலியா தன்னுடைய 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மேத்யூ வேடும், ஜோ பர்ன்ஸ் இருவரும் கவனமாக விளையாடினர். ஆனால் உமேஷ் யாதவின் பந்தில் பர்ன்ஸ் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வேடுடன் லபுஷேன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். ஆனால் வேட் 40 ரன்களிலும், லபுஷேன் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்த முறையும் சிறப்பாக ஆடவில்லை. அவர் 8 ரன்களில் பும்ராவின் பந்தில் கிளீன் பவுல்டு ஆனார். டிராவிஸ் ஹெட் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இந்தியாவை விட ஆஸ்திரேலியா 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேமரான் கிரீன் 17 ரன்களுடனும், கம்மின்ஸ் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போதைய நிலையில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. நாளை நடைபெறும் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது தெரிந்துவிடும்.