தேமுதிக பொறுப்பாளர்கள்.. விஜயகாந்த் அறிவிப்பு..
தேமுதிக கட்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகாவிட்டாலும் எல்லா கட்சிகளும் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக தலைமையிலான கூட்டணி நீடிப்பதாக அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அறிவித்து விட்டன.
அதே சமயம், அதிமுக ஏற்கனவே அமைத்த கூட்டணி தொடர்வதாக அறிவித்தாலும், அந்த கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, பா.ம.க கட்சிகள் அதை உறுதி செய்யவில்லை. தேமுதிக தங்களுக்கு 41 தொகுதிகள் தரும் கூட்டணியில்தான் இடம்பெறுவோம் என்று கூறியிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் பிரபாகரன் ஏற்கனவே ஒரு பேட்டியில் திமுக கூட்டணியில் இடம் பெறவும் வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறார். தேமுதிக எந்த பக்கம் செல்லும் என்பதை ஜனவரி மாதம் விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா கூறியிருக்கிறார்.
இந்நிலையில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொது தேர்தலுக்கு, 234 தொகுதிகளுக்கும் தேமுதிக கட்சியின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்டம், ஒன்றிய, நகர, பகுதி, வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை கழகம், சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.