ஜனவரி 13-இல் தியேட்டர்களில் மாஸ்டர் ரிலீஸ்
நடிகர் விஜய் நடித்த மாசு திரைப்படம் பொங்கலுக்கு வரும் ஜனவரி 13ஆம் தேதிதிரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் தெரிவித்தார். இது குறித்து திருப்பூரில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய் நடித்த மாஸ்டர் படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது.ஹிந்தியிலும் மாஸ்டர் வெளியாகிறது. உலகம் முழுவதும் ஆங்கில சப்டைட்டிலுடன் வெளியாக உள்ளது. இது குறித்து தயாரிப்பாளர்கள் எங்களிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட நடிகர் விஜய் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி.
தயாரிப்பாளர் லலித் குமார் 200 கோடி முதலீட்டை வட்டி கட்டி திரையரங்கில் வெளியிட காத்திருக்கிறார். 100 சதவீத இருக்கையுடன் ஜனவரி முதல் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என மூன்று சங்கம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளோம். திரையரங்கில் மட்டுமே மாஸ்டர் வெளியிடப்பட வேண்டும் என விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காத்திருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் ஓ.டி.டி யில் வெளியிட்டிருக்கலாம். அதை செய்யாமல் இருந்ததற்கு நன்றி. ஜனவரி 1 முதல் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். மீண்டும் ஒருமுறை முதல்வருக்கு இதே கோரிக்கையை வைக்கிறோம்.
அனைத்து ஓ.டி.டி தளங்களும் விஜய்யிடம் போட்டி போட்டு மாஸ்டர் படத்தை கேட்டனர். ஆனால் விஜய் தீர்க்கமான முடிவு எடுத்து திரையரங்கில் வெளியீடு செய்கிறார். அவரை போலவே அனைத்து நடிகர்களும் முடிவு எடுக்க வேண்டும். மாஸ்டர் படம் ரிலீஸ் ஆனதிற்கு பின்பு தான் அடுத்த பட ஷீட்டிங் செல்ல வேண்டும் என விஜய் காத்து கொண்டிருக்கிறார். அனைத்து மொழிகளிலும் பெரிய நடிகர்கள் முதல்வரை போய் சந்திக்கின்றனர். விஜய்யும் முதல்வரை சந்தித்துள்ளார் என்பது மகிழ்ச்சியை தருகிறது. அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து சந்தித்து இருக்க வேண்டும். பொங்கலுக்கு புதிய படங்கள் ரிலீஸ் போது கட்டண குறைவுக்கு முயற்சிப்போம்.
நிச்சயம் கட்டண உயர்வு இருக்காது. திரையரங்கை புறக்கணிக்கும் நடிகர்களின் படத்தை நாங்களும் புறக்கணித்தால் என்ன தவறு ? அது பற்றிய இறுதி முடிவை சங்கத்தின் மூலம் ஆலோசித்து சொல்வோம். ஓ.டி.டி செல்வது அவர்கள் விருப்பம். எங்களுக்கு காலம் வரும் போது நாங்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டி வரும். மக்கள் திரையரங்கிற்கு வர வேண்டும் என விருமபுகிறோம். அதனால் கட்டணத்தை குறைக்க முயன்று வருகிறோம். இவ்வாறு திருப்பூர் சக்தி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.