புதுச்சேரி அரசு போக்குவரத்து தனியார் மயம் ஆகாது: அமைச்சர் உறுதியால் போராட்டம் வாபஸ்
புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதைக் கைவிடக் கோரி அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்து இருந்தது. இதையடுத்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது: புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக அனைத்து ஊழியர் சங்கங்கள் போக்குவரத்து வசதியை அரசு தனியார் மயமாக்கப் போகிறது என்ற எண்ணத்தில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். புதுச்சேரி அரசை பொருத்தமட்டில் அப்படி எண்ணம் ஒருபோதும் கிடையாது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவிவரும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கக் கூடுதல் நிதி தேவை என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசைப் பொருத்தமட்டில் தனியார் மயமாக்கும் கொள்கைக்குஒருபோதும் துணை போகாது. எனவே அரசுப் போக்குவரத்துக் கழகத்தைத் தனியார் மயமாக்கப் போவதாகப் பரவி வரும் வதந்தியை நம்பி ஊழியர்கள் எந்தவிதவேலை நிறுத்த முடிவிற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொது மக்கள் நலனையும் சிரமத்தையும் கருத்தில் கொண்டு ஊழியர்கள் தங்கள்பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார்.அமைச்சரின் இந்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து கு தொழிற்சங்கங்கள் அறிவித்த போராட்டம் கைவிடப்பட்டது.