18 வயது பெண்ணை பலாத்காரம் பாஜக எம்.எல்.ஏ. - நீதி கேட்ட தந்தை கொலை
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மீது, பெண் ஒருவர் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த பெண்ணின் தந்தையை பாஜகவினர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 வயது பெண் ஒருவர் தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்காரும், அவரது சகோதரர்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக புகார் கொடுத்தார். அவர் இதுபற்றி ஏற்கெனவே இரண்டு முறை போலீசில் புகார் அளித்துள்ளார்.
எனினும் உத்தரப்பிரதேச பாஜக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், சில பாஜகவினரும், நியாயம் கேட்டு முதல்வர் வீட்டு முன்பு போராடுவதா? என்று கேட்டு, அந்த பெண்ணின் தந்தையான சுரேந்திரா சிங்கை மோசமாக தாக்கியுள்ளனர்.
முன்னதாக, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஒரு பழைய வழக்கைக் காரணம் காட்டி, விசாரணை என்ற பெயரில் கடந்த 5-ஆம் தேதி கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் சுரேந்திரா சிங்கை உன்னாவ் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
பாஜக-வினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருந்த சுரேந்திரா சிங்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உடல்நிலை மோசமாகி உள்ளது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது குடும்பத்தாருடன் ஞாயிறன்று லக்னோ நகருக்கு வந்தார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது தந்தை சுரேந்திரா சிங்குக்கு உரிய சிகிச்சை அளிக்க அனுமதிக்காமல் எம்.எல்.ஏ. தடுத்து வருவதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அத்துடன், தனது குடும்பத்தினருடன், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் வீடுமுன்பு, தீக்குளிப்பு முயற்சியிலும் ஈடுபட்டார்.
அப்போது, அந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்த போலீசார், பின்னர் விடுதலை செய்தனர். இந்நிலையில், சிறையில் இருந்த சுரேந்திரா சிங்கின் உடல் நிலை மோசமடையவே, அவரை இரவோடு இரவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமையன்று இரவு சுரேந்திரா சிங் மரணமடைந்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com