திருநள்ளாறு கோவிலில் ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்ய முடிவு: முதல்வர்
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து விரைவில் ரத்து செய்யப்படும் என புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா, இந்து மக்களின் நம்பிக்கைகளுள் ஒன்று. இதைத் தடை செய்யும் நோக்கில் கிரண்பேடி ஈடுபட்டார். கொரோனா பரவும் என்று கூறி நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்து உள்ளார். கொரோனா காலத்தில் வெளியே வராத கிரண்பேடிக்கு மக்கள் நலன் பற்றிப் பேசத் தகுதி கிடையாது.சனிப்பெயர்ச்சி விழாவை நிறுத்துவதற்காகக் காரைக்கால் சென்றவர் கிரண்பேடி. தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, கொரோனா சான்றிதழ் அவசியம் என்று அவர் உத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்றம் சான்றிதழ் தேவையில்லை என்று உத்தரவிட்டது. இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும் கிரண்பேடியைக் கேட்காமல், புதுச்சேரி பாஜக கட்சி எங்குப் போனது என்று தெரியவில்லை. பாஜக கட்சிக்குச் சூடு, சொரணை கிடையாது. கவர்னரின் இந்த தடையையும் மீறிச் சிறப்பாக சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் தேவையில்லை.அதே போன்று திருநள்ளாறு கோவிலில் ஆன்லைன் முன்பதிவு முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் படும். இதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு முறையால் கிராமப் பகுதி மிகவும் சிரமம் அடைந்து உள்ளனர் என்றார்.