10 ஆண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக கோஹ்லி தேர்வு
கடந்த 10 ஆண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித் கானும், டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று அறிவித்தது. இதன்படி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கேரிபீல்டு சோபர்ஸ் விருதும் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. விராட் கோஹ்லி கடந்த 10 வருடங்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 56.97 ரன் சராசரியில் மொத்தம் 20,396 ரன்களும், 66 சதங்களும், 94 அரை சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் மட்டும் இவர் 61.83 ரன் சராசரியில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களும், 39 சதங்களும், 48 அரை சதங்களும் அடித்துள்ளார். ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை இவர் டெஸ்ட் போட்டிகளில் 7,040 ரன்களை குவித்துள்ளார். இதில் 26 சதங்களும், 28 அரை சதங்களும் உண்டு. சிறந்த டி20 வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ராஷித் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இவர் டி20 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். மூன்று முறை 4 விக்கெட்டுகளையும், இரண்டு முறை 5 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார். மேலும் ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் விருது முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு கிடைத்துள்ளது. 2011ம் ஆண்டில் நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் ரன் அவுட்டான இங்கிலாந்து வீரர் இயான் பெல்லை மீண்டும் விளையாட அழைத்ததற்காக தோனிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெரி சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பது தான் தன்னுடைய நோக்கம் என்றும், பதவிகள் மற்றும் விருதுகள் அதனுடன் சேர்ந்து கிடைப்பது என்றும் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.