சமூக வலைதளங்களில் சிறுமிகளின் ஆபாச படம், வீடியோ.. கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் உள்பட 41 பேர் கைது...!
கேரளாவில் சிறுமிகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வாட்ஸ்அப், டெலிகிராம் உள்பட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த 41 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கேரளாவில் சமீபகாலமாக வாட்ஸ்அப், டெலிகிராம் உள்பட சமூக வலைதளங்களில் சிறுமிகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதாகப் போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து இந்தக் கும்பலைப் பிடிக்க ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைக்கு ஆபரேஷன் பி ஹன்ட் என பெயர் வைக்கப்பட்டது. கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த வல்லுனர்கள் உள்ள இந்த தனிப்படை கடந்த சில மாதங்களாகக் கேரளா முழுவதும் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தது. பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் மூலம் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது யார் யார் என்பது குறித்த விவரங்களைத் தனிப்படையினர் சேகரித்தனர். இதன்படி கேரளா முழுவதும் இதுவரை நடத்திய சோதனையில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அதன் பின்னரும் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என தெரியவந்தது.
இதையடுத்து நேற்று இந்த தனிப்படையினர் கேரளா முழுவதும் 465 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சிறுமிகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த 41 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களும் உள்ளனர். இவர்களிடமிருந்து 56 செல்போன்கள், டேப்லெட்டுகள், ஹார்டு டிஸ்குகள், மெமரி கார்டுகள், லேப்டாப், கம்ப்யூட்டர்கள் உட்பட 392 மின்னணு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கும்பல் பல பெயர்களில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குரூப்புகளை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு குரூப்பிலும் 400க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பகிர்வதற்கு நவீன சாப்ட்வேர்களை பயன்படுத்துகின்றனர். இதனால் இவர்கள் பகிரும் விவரங்களை எளிதில் வேறு யாராலும் கண்டுபிடிக்க முடியாது. 3 நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் தங்களது செல்போன்களை பார்மேட் செய்து விடுவார்கள். விசாரணைக்குப் பின் இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.