கொரோனா பணிக்காக இதுவரை ரூ.7,544 கோடி செலவு... முதல்வர் பழனிசாமி!
கொரோனா தொற்று பரவல் குறைந்தாலும், முகக்கவசம் அணிவதை தவிர்க்கக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் காட்டு தீயாக பரவி பெரும் நாசத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதற்கிடையே, பிரிட்டனில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா காரணமாக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உருவாறிய புதிய கொரோனா குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, பிரிட்டனில் இருந்து தமிழகத்திற்கு வந்த 13 நபர்களுக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு புதிய கொரோனா திரிபு பாதிப்பு உள்ளதா என்பதை அறிய பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே அதற்கான சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.7,544 கோடி செலவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு அதிக கவனம் எடுத்ததால்தான் வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் தினமும் 70,000 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா தடுப்பு பணிகளுக்காக 15,000 மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் முகாம்களில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இதில், கொரோனா அறிகுறி அறியப்பட்ட சுமார் 12 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிக அளவிலான கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் தமிழகத்தில்தான் உள்ளது. 235 பரிசோதனை மையங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. அரசு சார்பில் 67 மையங்களும், தனியார் சார்பில் 168 மையங்களும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால் மக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். புதிய வைரஸ் பரவ மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதுதான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.
இதற்கிடையே, பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 13 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு புனேக்கு அனுப்பப்பட்டதில், 4 பேரின் மாதிரிகள் வித்தியாசமாக இருப்பதாக புனே நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 4 பேரின் மாதிரிகளில் வித்தியாசம் இருப்பதால் மீண்டும் பரிசோதனை நடத்த ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது.