ஒழுங்காக படிக்காததால் பெற்றோர் கண்டிப்பு.. வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் பணத்துடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுவன்

ஒழுங்காக படிக்காததற்காக பெற்றோர் கண்டித்ததால் கோபமடைந்த 15 வயது சிறுவன், வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமானான். குஜராத்தை சேர்ந்த அந்த சிறுவன் கோவா, பூனா ஆகிய இடங்களுக்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது. குஜராத் மாநிலம் வடோதராவை சேர்ந்த இந்த சிறுவன் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வருகின்ற போதிலும் அந்த சிறுவன் ஒழுங்காக வகுப்புகளில் கலந்து கொள்வதில் என கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவனை தினமும் கண்டிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த சிறுவன் மாயமானான்.

செல்லும் போது தன்னுடைய செல்போனையும் எடுத்துக் கொண்டு சென்றான். மகனை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வடோதரா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் போலீசாரால் அந்த சிறுவன் எங்கு உள்ளான் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போன் ஸ்விட்ச் ஆஃபில் இருந்ததால் அந்த சிறுவன் இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் செல்போன் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டது. இதையடுத்து உஷாரான போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

சைபர் செல் போலீஸ் மூலம் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் பூனாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக பூனா போலீசுக்கு வடோதரா போலீசார் தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அந்த சிறுவனை மடக்கிப் பிடித்தனர். பின் வடோதரா போலீசார் பூனா சென்று அந்த சிறுவனை அழைத்து வந்தனர். வீட்டில் இருந்து ஒன்றரை லட்சம் பணத்துடன் சென்ற அந்த சிறுவன் பஸ் மூலம் முதலில் கோவா சென்று அங்குள்ள கிளப்புகளில் பணத்தை செலவழித்துள்ளான். பின்னர் அங்கிருந்து பூனா சென்றான். பணம் காலியான பின்னர் ஊருக்கு வர திட்டமிட்டிருந்த போது தான் அந்த சிறுவனை போலீசார் பிடித்தனர். பின்னர் அந்த சிறுவனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

More News >>