டெல்லியில் கடுங்குளிர்.. 3.6 டிகிரி செல்சியஸ் பதிவு.. காற்று மாசு அதிகரிப்பு..
டெல்லியில் இன்று(டிச.29) அதிகாலையில் மிகக் குறைந்தபட்சமாக 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுங்குளிருடன் காற்று மாசு அதிகரித்திருப்பதால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். மே, ஜூன் மாதங்களில் கோடை வெப்பமும் மிக அதிகமாகக் காணப்படும். தற்போது கடந்த 10 நாட்களாகக் கடுங்குளிர் நிலவுகிறது.
இன்று(டிச.29) அதிகாலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.6 டிகிரியாக பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இது சாதாரண வெப்பநிலையை விட மிகக் குறைவாகும்.குறிப்பாக, பனியுடன் கூடிய காற்று 20 கி.மீ. வேகத்தில் வீசுவதால், குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது. இரவு 7 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. காலையில் மக்கள் நெருப்பு மூட்டி, குளிர்காயும் காட்சிகளைக் காண முடிகிறது.
மேலும், டெல்லியில் காற்று மாசு மீண்டும் அதிகரித்து வருகிறது. காற்று மாசு அளவீட்டுமானியில் 332 புள்ளிகளாகப் பதிவாகியிருக்கிறது. குரு கிராம், நொய்டா, காசியாபாத், பிவான்டி, பாக்பத் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்று மாசு குறியீடு மிக மோசமாக உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.இதற்கிடையே, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் பனிமழை பெய்து வருகிறது. சிம்லா உள்ளிட்ட இடங்களில் பனிப்படர்வு காரணமாகப் போக்குவரத்து முடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வெளியே சுற்ற முடியாமல் லாட்ஜ்களில் முடங்கியிருக்கின்றனர்.