இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி...!
மெல்பர்னில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் தற்போது சமநிலையில் உள்ளது.ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 36 ரன்களில் ஆட்டமிழந்ததை இந்திய ரசிகர்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. டாசில் வெற்றிபெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதையடுத்து 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அபாரமாக விளையாடி 326 ரன்கள் குவித்தது. கேப்டன் ரஹானே சதமும், ஜடேஜா அரைசதமும் அடித்தனர். இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சில் 131 ரன்கள் முன்னிலை பெற்றது.இதன் பின்னர் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் இந்திய பவுலர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.
இதையடுத்து 200 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பின் 70 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய புஜாரா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கேப்டன் ரஹானேவும், கில்லும் நிலைத்து நின்று ஆடினர். இறுதியில் 15.5 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது. இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதமும், 2வது இன்னிங்சில் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய கேப்டன் ரஹானே மேன் ஆப் தி மேட்ச் ஆகத் தேர்வு செய்யப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதேபோல 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகளில் தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் முதல் டெஸ்ட் போட்டியைப் போலவே இரண்டாவது போட்டியும் நான்காவது நாளிலேயே முடிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.