போலீசின் அலட்சியத்தால் தீயில் கருகி இறந்த கணவன், மனைவி 2 மகன்கள் அனாதையான பரிதாபம்
போலீசின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் கணவன், மனைவி தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த தம்பதியின் 2 மகன்கள் அனாதையானார்கள். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை வெண்பகல் என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன் (47). இவரது மனைவி அம்பிளி (42). அம்பிளி மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் ஒர்க் ஷாப்பிலும், இன்னொருவர் பிளஸ் 2வும் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வசந்தா என்பவர் தன்னுடைய 3 சென்ட் நிலத்தை ராஜன் ஆக்கிரமித்துள்ளதாக கூறி நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இடத்தை காலி செய்ய நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் போலீசார், ராஜன் தங்கியிருந்த இடத்தை காலி செய்வதற்காக சென்றனர். ஆனால் அது தன்னுடைய நிலம் தான் என்று கூறிய ராஜன் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருப்பதாக கூறினார். இதனால் போலீசாரால் ராஜனை அங்கிருந்து காலி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வசந்தா மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார். இதை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக ராஜனை காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே ராஜன் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜனவரி 15 ம் தேதி வரை நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் போலீசார், ராஜனின் வீட்டுக்கு சென்று அவரை காலி செய்யுமாறு கூறினர். அப்போது போலீசாரை மிரட்டுவதற்காக தன்னுடைய மனைவியை கட்டியணைத்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிக்கப் போவதாக ராஜன் கூறினார். தனது கையில் இருந்த சிகரெட் லைட்டரை அவர் பற்ற வைத்தார். இந்த சமயத்தில் போலீசார் திடீரென அவரது கையில் இருந்த லைட்டரை தட்டி விட்டனர். அப்போது எதிர்பாராவிதமாக லைட்டரிலிருந்து இருவர் உடலிலும் தீ பரவியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே கருகினர். உடனடியாக இருவரையும் போலீசார் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி முதலில் ராஜனும், பின்னர் அம்பிளியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் கவனக்குறைவு தான் இருவரும் உயிரிழக்க காரணம் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். இதனால் ராஜன் மற்றும் அம்பிளியின் இரண்டு மகன்களும் அனாதையாகி விட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த திருவனந்தபுரம் எஸ்பிக்கு டிஜிபி லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க கேரள முதல்வர் பினராயி விஜயனும் உத்தரவிட்டுள்ளார். அனாதையான ராஜனின் மகன்கள் இரண்டு பேருக்கும் அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.