மகர விளக்கு பூஜை : சபரிமலை கோவில் நடை நாளை மாலை திறப்பு...!
மகர விளக்கு பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (30ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 31 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல முடியும்.இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டலக் கால பூஜைகள் தொடங்கின. 41 நாள் நீண்ட மண்டலக் காலம் கடந்த 26ம் தேதி நடந்த பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று இரவு 9 மணிக்குக் கோவில் நடை சாத்தப்பட்டது.
இந்நிலையில் மகர விளக்குப் பூஜைகளுக்காக நாளை மாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும். இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: இவ்வருட மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி (நாளை) நடை திறக்கப்படும். 31ம் தேதி அதிகாலை முதல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த மாதம் ஜனவரி 19 வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மறுநாள் 20ம் தேதி கோவில் நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்காகப் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று (28ம் தேதி) மாலை முதல் தொடங்கியது.
www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். இந்த மகர விளக்கு காலத்தில் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை எல்லா நாட்களிலும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 31ம் தேதி முதல் தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கோவிட்-19 பரிசோதனை கண்டிப்பாக நடத்த வேண்டும். மண்டலக் காலம் வரை ஆண்டிஜன் பரிசோதனை நடத்தினாலே போதுமானதாக இருந்தது. ஆனால் 31ம் தேதி முதல் ஆர்டிபிசிஆர், ஆர் டி லாம்ப் அல்லது எக்ஸ்பிரஸ் நாட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பரிசோதனை கண்டிப்பாக நடத்த வேண்டும். இந்த பரிசோதனைகள் பக்தர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்குச் செல்லும் போது 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட பரிசோதனை சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும். கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். நிலக்கல் பகுதியில் பரிசோதனை நடத்துவதற்கான வசதி இல்லை. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.