வங்கிகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்கிலிருந்து கோடிக்கணக்கில் மோசடி... ஒருவர் கைது...!
வங்கிகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்கிலிருந்து பல கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகக் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவரைப் பெங்களூருவில் வைத்து கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.சமீப காலமாக ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் இந்த மோசடி குறையவில்லை.
இந்நிலையில் கேரளாவில் பல வங்கிக் கணக்கில் இருந்து பல கோடி மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. எர்ணாகுளம் அருகே உள்ள மூவாற்றுபுழா என்ற இடத்தை சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சமீபத்தில் 85 லட்சம் ரூபாய் திடீரென பறிபோனது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் அதுகுறித்து மூவாற்றுபுழா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக எர்ணாகுளம் மாவட்ட எஸ்.பி. கார்த்திக் ஒரு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எர்ணாகுளம் போலீசார் விரைந்து சென்று நடத்திய விசாரணையில் மனோஜ் பிஸ்வாஸ் (47) என்பவர் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவைச் சேர்ந்த அவர் கடந்த சில மாதங்களாக மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இந்தக் கும்பல் நடத்தி வந்த மோசடி குறித்து எர்ணாகுளம் எஸ்.பி. கார்த்திக் கூறியது: ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் வங்கிக் கணக்குகளை இவர்கள் கண்காணித்து வருவார்கள். அதிக அளவில் பணம் வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்து அவரது வங்கிக் கணக்கை முதலில் இக்கும்பல் ஹேக் செய்யும். இதன் பின்னர் அந்த வங்கிக் கணக்கின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை கண்டுபிடிப்பார்கள். தொடர்ந்து அந்த கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள
செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து ஒரு போலியான சிம்கார்டை வாங்கி விடுவார்கள். இதற்காகப் போலியான அடையாள அட்டை நகல்களைக் கொடுத்து சிம் கார்டு தொலைந்து விட்டதாகக் கூறி புதிய சிம் கார்டை வாங்குவார்கள். பின்னர் அந்த சிம் கார்டுக்கு வரும் ஓடிபி எண்ணைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து தங்களது அக்கவுண்டுக்கு பணத்தை மாற்றுவது இவர்களது வழக்கம். இந்த உத்தியைப் பயன்படுத்தி இவர்கள் பல கணக்கிலிருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். இந்த கும்பலில் மேலும் பலர் இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது. இக்கும்பல் கேரளா மட்டுமல்லாமல் வேறு பல மாநிலங்களிலும் மோசடி நடத்தியிருக்கலாம். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.