6வது மாடியில் இருந்து குதித்து பெண் பலியான சம்பவம் பிளாட் உரிமையாளர் கைது
கேரள மாநிலம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து தமிழகப் பெண் இறந்த சம்பவம் தொடர்பாக பிளாட் உரிமையாளர் இம்தியாஸ் அகமதை போலீசார் இன்று கைது செய்தனர். சேலத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி குமாரி (46). இவர் கொச்சி மரைன் டிரைவ் பகுதியை சேர்ந்த இம்தியாஸ் அகமது என்பவரின் பிளாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது பிளாட் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் உள்ளது. இந்நிலையில் கடந்த 4ம்தேதி தேதி குமாரி அடுக்குமாடி குடியிருப்பில் கார்களை நிறுத்தும் பகுதியில் உள்ள கூரையின் மேல் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து அறிந்த எர்ணாகுளம் போலீசார் விரைந்து சென்று குமாரியை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 13ம் தேதி இவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், இம்தியாஸ் அகமதின் பிளாட்டில் இருந்து குமாரி பால்கனி வழியாக சேலையை கயிறு போல கட்டி இறங்க முயற்சித்தது தெரியவந்தது. பிளாட்டில் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர் தவறி விழுந்தது தெரியவந்தது. அவர் எதற்காக தப்பிக்க முயன்றார் என்பது குறித்து போலீசார் முதலில் முறையாக விசாரணை நடத்தவில்லை. இது தொடர்பாக முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து போலீசாருக்கு எதிராக அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த குமாரியின் கணவர் சீனிவாசன் கொச்சிக்கு விரைந்து சென்றார்.
இம்தியாஸ் அகம்மது தன்னுடைய மனைவியை சிறைப்பிடித்து வைத்திருந்ததாகவும், அதனால் தப்பிக்க முயன்ற போது தவறி கீழே விழுந்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன் இம்தியாசிடமிருந்து தன்னுடைய மனைவி 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை திருப்பித் தராமல் குமாரியை வெளியே செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று இம்தியாஸ் கூறியதாகவும் சீனிவாசன் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இதன்பிறகு தான் போலீசார் இம்தியாசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே இம்தியாஸ் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இம்தியாசை போலீசார் இன்று கைது செய்தனர்.