தலையிடும் சீனா... தீவிர கண்காணிப்பில் இந்தியா.. நேபாளத்தில் என்ன நடக்கிறது?!
நேபாள நாடாளுமன்றத்தை கலைக்க கடந்த டிசம்பர் 20-ம் தேதி பிரதமர் கே. பி. ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை கோரியதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து குடியரசுத்தலைவர் வித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார். இருப்பினும், வழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டிய நாட்களுடன் ஒப்பிடுகையில், 2 வருடங்களுக்கு முன்பாக, அதாவவது, 2021 ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் என்று தேதியை பிரதமர் ஒலி அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் 12 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் நேபாளத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் புஷ்ப கமல் தாஹால் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2018-ம் ஆண்டு நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டையும் இணைத்த பிறகுதான் பிரதமராக கே.பி. ஷர்மா ஒலி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஒருங்கிணைந்த கட்சியின் துணைத் தலைவராக மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹால் இருந்து வருகிறார்.
இதற்கிடையே, கடந்த சில வருடங்களாக சர்வதேச விவகாரங்களில் அதிகம் தலையிடாமல் இருந்த சீனா, தற்போது நேபாளத்தின அரசியல் பிரச்னையில் தலையிடத் தொடங்கி இருக்கிறது. எதிர்க்கட்சியினராக ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹால், முன்பு இந்தியாவைத் தொடர்ந்து ஆதரித்து வந்தார். ஆனால், தற்போது, சீனா தலையிடும் விவகாரத்தில் புஷ்ப கமல் தாஹால் தொடர்ந்து, மவுனம் சாதிக்கிறார். மேலும், சீனாவின் நேபாள தூதர் ஹூ யான்கி புஷ்ப கமல் தாஹாலையும், நேபாளத்தின் குடியரசுத்தலைவர் பித்யா தேவி பண்டாரியையும் சந்தித்திருக்கிறார்.
அதன் பிறகு, சீனா தன் வெளிவிவகாரத் துறையின் துணை அமைச்சர் க்யூ யேசுவையும் நேபாளத்துக்கு அனுப்பி இருக்கிறது. நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவைச் சரி செய்ய, சீனா விரும்புவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இருப்பினும், நேபாள நாட்டு உள்விவகாரங்களில் சீன அரசு தலையிடுவதற்கு எதிரிப்பு தெரிவித்துள்ள நேபாள மக்கள் வெளிப்படையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் இந்த விளையாட்டை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், இது நேபாளத்தின் உள்விவகாரம். இது ஜனநாயக ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.