கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.. சிகிச்சையில் 8,747 பேர்..
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று(டிச.29) ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. தற்போது மாநிலம் முழுவதும் 8747 பேர் சிகிச்சையில் உள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 48,153 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று(டிச.29) புதிதாக 16,432 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
ஆனாலும், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தினமும் புதிதாக ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று பரவி வந்தது. நேற்று இது 957 ஆகக் குறைந்தது. தமிழக அரசு நேற்று(டிச.29) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 957 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16,132 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1065 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 95,293 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 12 பேர் பலியானார்கள்.
இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,092 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8747 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னை(286பேர்), கோவை(81பேர்) மாவட்டங்களில் மட்டும் நேற்று 50க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று பாதித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 24,958 பேருக்கும், செங்கல்பட்டில் 49,900 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42,586 பேருக்கும், கோவையில் 52,155 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று 64,768 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 957பேருக்குத்தான் தொற்று பாதிப்பு உறுதியானது. அதனால் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.