முன்னணி நடிகருக்கு கொரோனா: நடிகை ஷூட்டிங் தள்ளிவைப்பு.. மனப்பாடம் செய்த வசனம் வீணா போச்சே..
கொரோனா வைரஸ் திரையுலகில் பலவித தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத் தட்டத் திரையுலகை முடக்கிப் பல ஆயிரம் கோடிகளை இழப்புக்குள்ளாக்கியது. பல நடிகர், நடிகைகளை கொரோனா பிடித்து ஆட்டிப் படைத்தது. அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சரத்குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், நடிகைகள் தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாராய், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா அர்ஜூன், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர்.
தற்போது மற்றொரு பிரபல நடிகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.சிரஞ்சீவி மகன் ராம் சரண். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார். ராம் சரணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதையடுத்து அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டிருக்கிறார். ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண் ஜோடியாக அலியா பட் நடிக்கிறார். கடந்த மாதம் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் வந்தார். அவர் சோலோவாக நடிக்கும் காட்சிகளையே இயக்குனர் படமாக்கினார். ராம் சரண் உடன் அலியா பட் நடிக்க வேண்டிய காட்சிகளை ஜனவரி மாதம் படமாக்கத் திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் ராம் சரணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அலியாவின் படப் பிடிப்பு திட்டம் தள்ளி வைக்கப்பட்டு புதிய திட்டத்தைப் படக் குழு தயாரித்து வருகிறது. இந்த காட்சிகளுக்காக அலியா பட வசனங்களை மனப்பாடம் செய்து வைத்தார். தற்போது படப்பிடிப்பு தள்ளிப்போவதால் அவர் படித்த அச்சங்கள் எல்லாம் மறந்துவிடும் சூழலுக்குள்ளாகி இருக்கிறார். ராம் சரண் முழுமையாகக் குணம் ஆகி வந்த பிறகு அலியாபட் உடன் அவர் நடிக்கும் காட்சிகளைப் படமாக்க உள்ளனர்.
இரண்டு மாத்துக்கு முன் சிரஞ்சீவி ஆச்சார்யா படப் பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பாசிடிவ் எனத் தெரியவந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அடுத்த சில தினங்களில் தனியார் மருத்துவமனையில் சிரஞ்சீவி பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஆச்சார்யா படப் பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.