புத்தாண்டு கொண்டாட்டம்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..
புத்தாண்டு கொண்டாட்டங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மாநில அரசுகள் விழிப்புடன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவில் இது வரை ஒரு கோடி 2 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவியிருக்கிறது. உருமாறிய கொரனோ வைரஸ் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் இந்த தொற்று பரவி வருகிறது.
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலருக்கும் உருமாறிய கொரோனா பாதித்துள்ளது. டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்காக சேர்க்கப்பட்ட 8 பேரில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதித்திருக்கிறது. இந்த புதிய வைரஸ்(super spreader) வேகமாக பரவக் கூடியது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், உருமாறிய கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு டிச.31ம் தேதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ஜன.7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தையொட்டி பல்வேறு கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகளில் அதிகமான மக்கள் கூடுவார்கள். உருமாறிய கொரோனா வேகமாக பரவக் கூடியது என்பதால், புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்கும் பணிகளை மாநில அரசுகள் மிகவும் விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.