தமிழ் மொழியில் படித்தவர்களை புறக்கணிப்பதா? டிஎன்பிஎஸ்சிக்கு ஸ்டாலின் கண்டனம்..

தொல்லியல் அலுவலர் பணிக்கு தமிழ்நாட்டில் படித்தவர்களை டிஎன்பிஎஸ்சி புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தனது 28.11.2019 அறிவிப்பின் மூலம் 18 தொல்லியல் அலுவலர் பதவிக்குத் தேர்வு அறிவித்தது. அப்பதவிக்கு எம்.ஏ(தமிழ்), எம்.ஏ(வரலாறு) ஆகிய கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இத்துடன் கல்வெட்டியல் - தொல்லியல் முதுநிலைப் பட்டயம் எனும் கல்வித் தகுதி இருந்தும், நடந்து முடிந்துள்ள தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளை நிராகரித்துள்ளதும், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதும் மிகுந்த வேதனைக்குரியது. பிற மாநிலங்களில் பயின்ற தொல்லியல்துறை மாணவ மாணவிகளைக் கலந்தாய்வுக்கு அழைத்துள்ள டிஎன்பிஎஸ்சி ஏன் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பயின்ற மாணவ - மாணவியரை நிராகரிக்கிறது?

அங்கு ஓராண்டு முதுகலைத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பட்டயம் பெற்ற மாணவ மாணவியருக்கு ஓரவஞ்சனை செய்து ஒதுக்குவது ஏன்? தமிழகத்தில் படிப்போருக்குத் தமிழ்நாட்டில் வேலை கொடுக்க மறுப்பது ஏன்? பிற மாநில மாணவர்களை அழைத்ததோடு மட்டுமின்றி, Other Category என்ற பிரிவிலிருந்து இரு மாணவர்களை இந்தக் கலந்தாய்வுக்கு அழைத்ததன் மர்மம் என்ன? தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளில் நான்கில் மூன்று பங்கு தமிழில்தான் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது தமிழ் படித்த மாணவ - மாணவியருக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பது அராஜகமானது; கடும் கண்டனத்திற்குரியது. இந்த விண்ணப்பங்களில் தமிழ் மொழி பயின்றதற்கான முன்னுரிமை இடஒதுக்கீடு கோருபவரா என்று கூடக் கேள்வி எழுப்பாமல், ஒரு விண்ணப்பப் படிவத்தை வெளியிட்ட தேர்வாணையம், தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் படித்தவர்களைப் புறக்கணிப்பதை அ.தி.மு.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

நிராகரிக்கப்பட்ட மாணவ - மாணவியர் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் என்பது இன்னொரு கொடூரம்! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தீ.ஆனந்தி 316 மதிப்பெண் பெற்று, தமிழக அளவில் 4-ஆவது இடத்திலும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கீதா 4-ஆவது இடத்திலும், அனிதா 14-ஆவது இடத்திலும் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் இவர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. தமிழக தொல்லியல் நிறுவனத்தில் பயின்ற மாணவ - மாணவியர் இன்றைக்கு மிகப்பெரிய ஆய்வாளர்களாக - அறிஞர்களாக இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தேர்வாணையமே பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளிப்பதும், இந்தத் தேர்வில் தமிழக மாணவ - மாணவியரைப் புறக்கணிக்கும் வகையில் தேர்வுகளை நடத்துவதும் மிகுந்த கவலைக்குரியது. பட்டயப் படிப்பு எந்த மொழியில் கற்றுத்தரப்பட்டது என்ற சான்றிதழைக் கொடுக்க மறுத்து இப்படியொரு அநீதியை இந்தத் தேர்வில் அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்வில் பங்கேற்றவர்களில் - நிராகரிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கு மாணவ மாணவியர் தமிழ்த் துறையினைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, தொல்லியல் அலுவலர் பதவிக்கான தேர்வில் நடைபெற்றுள்ள இந்தக் குளறுபடிகளுக்கு உடனடியாகத் தீர்வு கண்டு, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பயின்ற தமிழக மாணவ மாணவியர்க்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவரைக் கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக இதில் தலையிட்டு - தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்கு தொல்லியல் அலுவலர் பதவித் தேர்வில் நேர்ந்துள்ள அநீதியைக் களைந்து, கலைஞர் அளித்த அந்த முன்னுரிமை இடஒதுக்கீட்டின் பயன் தமிழக மாணவ, மாணவியர்க்குச் சென்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

More News >>