போராட்டத்தால் ஸ்தம்பித்தது அண்ணாசாலை: பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஐபிஎல் போட்டி
சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையில் போராட்டம் வலுவடைந்ததை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றம் அவகாசம் கொடுத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக் கூடாது என்ற எதிர்ப்புகள் வலுவடைந்தது.
ஐபிஎல் போட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, எஸ்.டி.பி.ஐ., ரஜினி மக்கள் மன்றம், நாம் தமிழர் கட்சி, மாற்றுத்திறனாளிகள் என பலர் போராட்டத்தில் குதித்தனர். அண்ணாசாலையில் இருந்து திருவல்லிக்கேணி வழியாக சேப்பாக்கம் முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயன்றனர்.
அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதை அடுத்து, போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதனால், போராட்டக்காரர்கள் சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐபிஎல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் என ஏற்கனவே அறிவித்ததால், கிரிக்கெட் வீரர்களை பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலின் பின்வாயில் வழியாக இரண்டு பேருந்துகளில் போலீசார் அழைத்து சென்றனர்.
வீரர்கள் பத்திரமாக சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைந்து வந்ததை அடுத்து, பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்ததுபோல் இன்றைக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சரியாக 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com