கார்த்தி - செல்வா படம் 10 ஆண்டுக்கு பிறகு ரீ ரிலீஸ்..
பருத்தி வீரன் படத்தில் கார்த்தி அறிமுகமானார். அமீர் இயக்கி இருந்தார். பிரியாமணி ஹீரோயினாக நடித்தார். இப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. கார்த்தியின் 2வது படமாக அமைந்தது செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன். இதில் ஆண்ட்ரியா, ரீமாசென் ஹீரோயின்களாக நடித்தனர். இப்படம் வெளியானபோது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொண்டது. பல்லவர்களின் பற்றி சரித்திர பின்னணியில் இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த காலம் முதல் மன்னர் படங்களை உயர்த்தியும் போரில் வென்ற சாதனையாளர்கள் என்றும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்கள் பதுங்கி வாழ்வதுபோல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதுவும் விமர்சனத்துக்குள்ளானது.
2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது 10 ஆண்டுக்கு பிறகு வருடத்தின் இறுதி நாளான 31ம் தேதி மீண்டும் வெளியாகிறது. செல்வராகவன், கார்த்தியின் ரசிகர்கள் ஒரு தரப்பினர் இதுவொரு கிளாஸ் படம் என்று பாராட்டி உள்ளனர். இப்படம் மீண்டும் வெளியாவது குறித்து கார்த்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது: ஆயிரத்தில் ஒருவன் எனது இரண்டாவது படம். பருத்தி வீரனுக்காக நான் டப்பிங் செய்யும்போது செல்வாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. எனது இரண்டாவது படம் செல்வாவுடன் இருந்தது என்பதும் அது சாகச வகையைச் சேர்ந்தது என்பதும் என்னை மகிழ்வித்தது. பருதிவீரனை முடித்த பிறகு எனது அடுத்த திட்டம் குறித்து நான் துல்லியமாக இருந்தேன். இவ்வளவு பெரிய படத்தில் நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இரண்டரை ஆண்டுகளாக திரைப்படத்திற்காக பணியாற்றிய ஒவ்வொருவரும் தமிழ் சினிமா இதற்கு முன்பு பார்த்திராத புதிய ஒன்றை உருவாக்குவதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தனர். செல்வா ஒவ்வொரு நாளும் செட்டை உருவாக்க எப்படியெல்லாம் யோசித்துள்ளார் என்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர், அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தில் உள்ள பாடல்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன. ஒரு திரைப்படம் வெளியான 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நல்ல வரவேற்பைப் பெறுவது அசாதாரணமானது. தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். படம் இப்போது டிசம்பர் 31 ஆம் தேதி மறு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. பார்வையாளர்களின் ஆதரவிற்கும் படத்தை நேசித்தவர்களுக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. இவ்வாறு கார்த்தி கூறி உள்ளார்.