கன்னியாகுமரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்..

டெல்லி மும்பை சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாகச் சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் பல நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவர்.சிறிய ஹோட்டல்கள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை வண்ண வண்ண விளக்குகள், கலைநிகழ்ச்சிகள், அறுசுவை உணவு எனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமர்க்களப்படும்.

மேலும் கடற்கரையில் கூடும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் என ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி இரவு கன்னியாகுமரி கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காகப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடற்கரை சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 31ம்தேதி மாலை 6 மணிமுதல் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழையத் தடைவிதிக்கப்பட உள்ளது. இரவில் கடற்கரையில் குடும்பத்துடன் சுற்றுலா கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள சொத்தவிளை, சங்குதுறை, பொழிக்கரை போன்ற கடற்கரை சுற்றுலாத் தலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நகரை சுற்றி எட்டு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுற்றுலா வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைச் சாலையில் குடி போதையில் பைக்கில் சென்றால் பைக்கை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 1-ம் தேதி விவேகானந்தர் மண்டபம், மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்ட தடைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர் .

More News >>