பஞ்சாப் விவசாயிகளால் 1600 மொபைல் டவர் சேதம்.. டிஜிபிக்கு கவர்னர் சம்மன்..
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தின் போது 1600 மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருக்கிறார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.31) 36வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றன.
இதற்கிடையே, பஞ்சாப்பில் விவசாய மண்டிகளின் ஏஜென்டுகளின் கம்பெனிகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால், தங்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் கருதினர். இதனால், பஞ்சாப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் டவர்களை அடித்து உடைத்துச் சேதப்படுத்தினர். விஜயகாந்த்தின் ரமணா படத்தில் யூகிசேது, இங்க அடித்தால் அங்க வலிக்கும் என்று ஒரு வசனம் பேசுவார். அதைப் போல் பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் அம்பானியின் சொத்தை அடித்தால், பாஜக அரசு இறங்கி வரும் என்று விவசாயிகள் கருதியிருப்பார்களோ என்னவோ!
இந்நிலையில், பஞ்சாப்பில் மொபைல் கம்பெனிகளின் 1600 டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபிக்கு கவர்னர் வி.பி.சிங் பட்னோர், சம்மன் அனுப்பியிருக்கிறார். மொபைல் டவர்களை பாதுகாக்க முதல்வர் அமரீந்தர்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று அறிக்கை கேட்டிருக்கிறார். இதற்கிடையே, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோசேம் அமைப்பும், முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. பஞ்சாப் தொழில் புரிவதற்கு உகந்த மாநிலம் என்ற பெயர் எடுத்த மாநிலம். இங்கு இப்படி மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இம்மாநிலத்தில் முதலீடு செய்யவே தயங்குவார்கள் என்று அந்த கடிதத்தில் எச்சரித்துள்ளது.