நியூ இயரை உங்களுக்கானதாக மாற்றிக்கொள்வது எப்படி?

2020ம் ஆண்டு - கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பெரும்பாலும் பயம், பதற்றம், அவநம்பிக்கை, சலிப்பு இவற்றில் கழிந்துபோனது. உலகம் முழுவதும் இது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனி நபர் உடல் ஆரோக்கியத்தைப் பாதித்ததின் மூலம் வணிகம், போக்குவரத்து உள்ளிட்ட எல்லா துறைகளிலும் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.சாதகமற்ற இந்தச் சூழலில் 2021 புத்தாண்டை நமக்கானதாக்கிக் கொண்டு ஜெயிப்பது எப்படி என்பது குறித்து மனநல ஆலோசகர்கள் அளித்துள்ள அறிவுரைகள்

சிந்தனை போக்கை மாற்றுங்கள்

எதையும் உறுதியான நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். பிரச்சனைகளைக் கண்ணோக்கும் தன்மையை மாற்றிக்கொள்ளவேண்டும். எல்லா சூழ்நிலையிலும் நம்பிக்கையோடும் நன்றியுணர்வோடும் உறுதியாக நிற்பது வெற்றியுடன் கடந்து செல்ல உதவும்.உறுதியாக நில்லுங்கள்.உங்கள் எண்ணங்களை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தி, உங்களுக்காக நீங்களே உறுதியாக நிற்பதைப் பழக்கப்படுத்துங்கள்.உங்களை நேசியுங்கள்.உங்களுக்கு உற்ற நண்பர் நீங்களேதான்! எவ்வித நிபந்தனைகளுமின்றி உங்களை நீங்களே நேசித்திருங்கள். தேவைப்படும் வேளைகளில் உங்களுக்கானவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திடத் தவறவேண்டாம்.

நகைச்சுவை

நகைச்சுவையுடன் ஒன்றித்து வாழப் பழகுங்கள். நகைச்சுவை மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். வாழ்வின் கடினமான கட்டங்களை அமைதியுடனும் மனபாரம் இல்லாமலும் கடந்து செல்ல நகைச்சுவை உதவும்.

குமுறலை வெளியேற்றுங்கள்

மனக் குமுறல்களை உள்ளே வைத்துப் புழுங்காதீர்கள். உங்களைப் போன்ற மனப்பான்மை கொண்ட நண்பர் வட்டத்தில் இணைந்து, மனக் குமுறல்களுக்கு வடிகால் தேடிக்கொள்ளுங்கள்.

ஒழுங்குமுறை தேவை

தினசரி நடவடிக்கைகள், செயல்பாடுகளைச் சரியானபடி திட்டமிட்டு ஒருங்கிணைத்திருங்கள். சரியான திட்டமிடல் இல்லையென்றால் வேலைகள் குவிந்து மன அழுத்தம், மனக்கலக்கம் உருவாகிட நேரும்.

பொழுதுபோக்கு

பிரச்சனை எழாத நாள் என்று ஒன்று இருக்காது. எத்தனை பிரச்சனை, எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் மனத் திருப்தி பெறுவதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஏற்றவண்ணம் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

ஆழ்ந்து சுவாசியுங்கள்

சரியானபடி அமருங்கள். ஆழ்ந்து சுவாசியுங்கள். தினமும் அவ்வாறு செய்வது மூளைக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும்.

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவுப் பொருள்களைச் சாப்பிடுதல், போதுமான அளவு நீர் அருந்துதல் ஆகியவை உடல் நலத்தைக் காப்பாற்ற உதவும். அதிக அளவு இனிப்பு மற்றும் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்கள் இருப்பவர்கள் அவற்றைப் புத்தாண்டில் விட்டுவிடுவது நல்லது.

அனைவருக்கும் தி சப் எடிட்டரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

More News >>