நிதிஷ்குமார் ஆட்சியை கவிழ்க்க முயற்சியா? ஆர்ஜேடி அதிரடி தகவல்..

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளதாக எதிர்க்கட்சியான ஆர்ஜேடி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணியில் இருந்து சிராக் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி விலகினாலும், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தது. அதே சமயம், ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்துப் போட்டியிட்டது. இது, நிதிஷ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்காமல் தடுப்பதற்காக பாஜக செய்யும் சூழ்ச்சி என்று அப்போதே பேசப்பட்டது.

தேர்தல் முடிவுகளில் பாஜக 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியூ) 43 தொகுதிகளிலும் வென்றன. ஆனாலும், நிதிஷ்குமாரே மீண்டும் முதலமைச்சர் என்று பாஜக அறிவித்து, அதன்படி அவர் பதவியேற்றிருந்தார். எனினும், நிதிஷ்குமாருக்கு பாஜக தயவில் முதல்வராக இருப்பது பிடிக்கவில்லை. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அருணாசலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 7 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பாஜகவுக்குத் தாவினர். இது ஜேடியூ கட்சி முன்னணி தலைவர்களுக்கு பாஜக மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின்(ஆர்ஜேடி) மூத்த தலைவர் சயாம் ரஜாக் ஒரு குண்டு போட்டார். ஜேடியூ கட்சியின் 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் அவர்கள் அணி மாறத் தயாராக உள்ளதாகவும் கூறினார். இது ஆளும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஆனால், முதல்வர் நிதிஷ்குமார் இதை மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற பொய் தகவல். எங்கள் கட்சியில் யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை என்றார். அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ்ரஞ்சன் பிரசாத் கூறுகையில், பாஜக மீது அதிருப்தி இருந்தாலும் அது எந்த விதத்திலும் ஆட்சியைப் பாதிக்காது என்றார். பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.தாக்குர் கூறுகையில், அருணாசலப் பிரதேச அரசியல் வேறு. பீகார் அரசியல் வேறு என்றார்.

More News >>