ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக 2 படங்கள் ரிலீஸ்..
மாநாடு தயாரிப்பாளர் விடுத்த கோரிக்கை.. கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்த திரை அரங்குகள் சென்ற நவம்பர் மாதம் திறக்க அரசு அனுமதி வழங்கியது. 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன் கொரோனா விதிமுறைகளும் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான படங்களே திரைக்கு வந்தது. பெரிய படங்களான விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தியேட்டரில் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கும் போது படங்களை திரையிட முடிவு செய்திருந்தனர். இதனால் தியேட்டர் அதிபர்கள் 100 சதவீத அனுமதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். நடிகர் விஜய்யும் நேரடியாக முதல்வர் எடப்படி பழனிசாமியை சந்தித்து திரை அரங்குகளில் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தார்.
இது குறித்து முதல்வர் பரிசீலித்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். கூடிய விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பொங்கல் தினத்தையொட்டி வரும் ஜனவரி 13ம் தேதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் திரைக்கு வருவதாக பட நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோனன், ஆண்ட்ரியா, சாந்தனு போன்றவர்கள் நடித்திருக்கின்றனர். அனிருத் இசை அமைத்திருக்கிறார். லோலேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். தமிழ் தவிர இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக மாஸ்டர் வெளியாகிறது. அதேபோல் பொங்கல் தினமான 14ம் தேதி சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் திரைக்கு வருகிறது. ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்த சிம்பு தற்போது புதிய தோற்றத்துடன் ஈஸ்வரன் படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் படங்களாக இவை இரண்டு படங்களும் இருக்கும் என்று திரையுலகினர் எதிர்ப்பார்த்திருக்கின்றனர். மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும் என்று தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. இவர் வெளியிட்டுள்ள மெசேஜில். சினிமா துளிர்க்க மக்களை திரையரங்குக்கு இழுக்க மிக பெரிய சக்தி தேவை, கடற்கரை, கடைகள் நிரம்பி வழிகின்றன. திரையரங்கும் நிரம்ப வேண்டும். அதற்கு ஈர்ப்பு சக்திகளாக இறங்க வரும் மாஸ்டர். ஈஸ்வரன் படங்களுக்கும் மிகப் பெரிய வரவேற்பு கொடுங்கள் மக்களே என தெரிவித்திருக்கிறார்.