ஈஸ்வரன் படத்துக்கு மிரட்டல்? பிரபல நடிகர் நடத்திய கோ பூஜை..
சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 2ம் தேதி சென்னை ஆல்பட் தியேட்டரில் ஈஸ்வரன் படத்தின் ஆடியோ வெளியிடப்படுகிறது. இதற்கிடையில் ஈஸ்வரன் படத்தை வெளியிட வேண்டு மென்றால் கோடிகளில் தங்களுக்குப் பணம் செட்டில் செய்ய வேண்டும் என்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தைத் தயாரித்தவர்கள் தரப்பிலிருந்து மிரட்டல் வருவதாக தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளரும். பட அதிபருமான ஜே எஸ்.கே சதீஷ்குமார் ஒரு ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, டிரிப்பில் ஏ பட தரப்பிலிருந்து ஈஸ்வரன் படத்தை வெளியிட வேண்டுமென்றால் தங்களுக்குக் கோடிகளில் பணம் தர வேண்டும் என்று கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சனை தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசப்பட்டது டிரிப்பில் ஏ படத்துக்குச் சிம்பு தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இனி கோர்ட் மூலம்தான் அதனைச் சம்பந்தப்பட்டவர்கள் தீர்க்க வேண்டும் அதை விடுத்துக் கட்டப்பஞ்சாயத்து செய்வது சரியல்ல அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈஸ்வரன் படம் சொன்ன தேதியில் வெளியாகும் தயாரிப்பாளர்கள் அதற்குப் பக்க பலமாக இருப்போம் எனத் தெரிவித்திருக்கிறார்.இதற்கிடையில் சிம்புவின் கோ பூஜை விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் உள்ளவர். ஒவ்வொரு படம் முடிந்ததும் இமயமலை சென்று தியானம் செய்வது வழக்கம். அந்த பாணியில் தற்போது நடிகர் சிம்பு தன்னை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.சிம்பு ஒன்றரை வருடமாக நடிக்காமலிருந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அவர் தனது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மானார்.
இதையடுத்து சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இப்படத்தை மொத்தம் 40 நாட்களில் நடித்து முடித்து டப்பிக்கும் பேசி முடித்த சிம்பு உடனடியாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதன் படப்பிடிப்பும் வேகமாக நடக்கிறது. இதற்கிடையில் சிம்பு மாலை அணிந்து சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்தார். தற்போது சிம்பு, கோவில் ஒன்றில் கோ பூஜை செய்தபடி பசுவுக்கு வாழைப்பழம் ஊட்டும் வீடியோ நெட்டில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் சிம்புவும், நடிகர் மஹத் ராகவேந்திராவும் கறுப்பு சட்டை, கறுப்பு வேட்டி அணிந்து சாமி முன்னிலையில் பசுவுக்கு வாழைப்பழம் ஊட்டி அதனை வணங்குகின்றனர்.