உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகிறது பிரதமர் மோடி...!
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது என்றும், தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ் காட்டில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியது: நம் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அடுத்த வருடம் உலகத்திலேயே மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது.
தடுப்பூசி விநியோகிப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. அடுத்த வருட இறுதிக்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும். 19 மத்திய அமைச்சர்களுக்கு இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி தொடர்பான விண்ணப்பங்களை ஆய்வு செய்ய மத்திய மருந்து தர நிர்ணய அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கோவிஷீல்டு கோவாக்சின் தயாரிப்பாளர்களான சிரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை அளித்துள்ள சோதனை ஒத்திகை அறிக்கையை இக்குழு ஆய்வு செய்யும். நோய் இல்லாமல் வாழ்வது தான் நம்முடைய சொத்தாகும்.
இதை 2020ம் ஆண்டு நம்மை உணர்த்தி விட்டது. சர்வதேச சுகாதாரத் துறையில் இந்தியா ஒரு மையமாக மாறி வருகிறது. 2021ல் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும். மருந்தும், முன்னெச்சரிக்கையும் தான் 2021ல் நம்முடைய தாரக மந்திரம் ஆகும்.தற்போது தடுப்பூசி தொடர்பான பல வதந்திகள் நம் நாட்டில் பரவி வருகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம். நம் நாட்டில் நல்ல தகவல்களை விட வதந்திகள் தான் மிக வேகமாகப் பரவுகிறது. தங்களது சொந்த நலன்களுக்காகப் பல ஆட்கள் வதந்திகளை வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர்.
தடுப்பூசி போடத் தொடங்கும் வரை இதுபோன்ற வதந்திகள் மேலும் பரவ வாய்ப்பு உண்டு. சிலர் இதற்குள் வதந்திகளைப் பரப்பத் தொடங்கி விட்டனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் ஒரு மறைமுக எதிரிக்கு எதிராக நடைபெறும் போராட்டமாகும். நாட்டின் மீது பற்று கொண்ட குடிமகன்கள் இந்த வதந்திகளை நம்பக் கூடாது. இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எதையும் பரிசோதித்துப் பார்க்காமல் சமூக இணையதளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.