புதிய வருடத்தில் நல்ல தகவல் வரும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவர் தகவல்
புத்தாண்டில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் உறுதியாகத் தொடங்கும் என்பதை மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் சொமானி சூசகமாகத் தெரிவித்துள்ளார். புதுவருடம் நமக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும் என்றும், நல்ல தகவல் விரைவில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.இந்தியாவில் கொரோனா நோய்க்கான தடுப்பூசி விநியோகிப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகள் அனைத்துமே வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மிக விரைவிலேயே இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியும் இதை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி பொது மக்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று அவர் கூறினார். இந்தியாவின் சிரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோடெக் மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் தயாராக இருக்கிறது. இது தொடர்பாக நாளை நடைபெற உள்ள மருந்துக் கட்டுப்பாட்டுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் தடுப்பூசிக்கான அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராசென்காவும் சேர்ந்து கண்டுபிடித்த தடுப்பூசியைத் தான் இந்தியாவின் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ளது. பாரத் பயோடெக் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இவை இரண்டும் அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் பைசர் நிறுவனம் தங்களுடைய மருந்துக்குக் கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது.ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்குத் தான் இந்தியாவில் முதலில் அனுமதி கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. முதல் கட்டமாக 5 கோடி டோஸ் தடுப்பூசி வழங்க முடியும் என்று சிரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இந்தியர்களுக்குத் தான் முதலில் தடுப்பூசி கொடுக்கப்படும் என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடார் பூனவாலா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர் வி.ஜி. சொமானி கூறுகையில், வரும் புத்தாண்டு இந்தியாவுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்முடைய கைவசம் சில முக்கியமான கண்டுபிடிப்புகள் இருக்கும். தற்போதைக்கு இவ்வளவு மட்டும் தான் என்னால் கூற முடியும் என்று தெரிவித்தார். இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.