இதை செய்ய தவறினால் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும், TNPSC அதிரடி!
அரசு வேலை என்பது இளைஞர்களின் கனவாகவே உள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவை சார்ந்த தேர்வாணையங்களை அமைத்து, அதன் மூலம் தேர்வுகள் நடத்தி தேவையான ஆட்களைத் தேர்வு செய்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைத் தமிழக அரசு தேர்வாணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த தேர்வாணையம் மற்றும் சில தன்னிச்சையான அரசு தேர்வு முகைமைகளில் பல்வேறு விரோத செயல்கள் நடைபெறுவதாகப் பல செய்திகள் சமூக வலைத்தளம் மற்றும் செய்தித் தாள்களில் வருவதையும் காண முடிகிறது. மேலும் ஆசிரியர்கள் தேர்வாணையம் நடத்திய பாலிடெக்னிக் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதை, பலர் அம்பலப்படுத்தியதால் அந்த தேர்வு அறிவிப்பு நீக்கப்பட்டு, அதன் மீதான வழக்கும் நடந்து வருகிறது. இது போன்ற விரோத செயல்களைத் தடுக்க அரசு தேர்வாணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சில வழிமுறைகளைத் தமிழக அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்வு தொடங்கும் அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்தை அடைய வேண்டும். கருப்பு நிற மையினால் மட்டுமே விடையளிக்க வேண்டும். விடைத்தாளில் இரண்டு இடங்களில் கையொப்பம் இட வேண்டும். மேலும் இடது கை பெருவிரல் ரேகையைப் பதிவிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை புதிய முயற்சியாக, ஒவ்வொரு வினாவிற்கும், விடையளிக்க ஐந்து வில்லைகள் அளிக்கப்படும். அதாவது, (a), (b), (c), (d), (e) இதில் (e) என்பது விடை தெரியாத பட்சத்தில் குறிக்க வேண்டும். பின்னர் தேர்வு முடிந்த பிறகு மொத்தம் எத்தனை வினாக்களுக்கு விடையளிக்கப்பட்டது என்பதனையும் குறிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் (a) ல் எத்தனை விடை, (b) ல் எத்தனை விடை, (c) ல் எத்தனை விடை மற்றும் (d) ல் எத்தனை விடை குறிக்கப்பட்டுள்ளது என்பதனையும் குறிக்கவேண்டும். இதனை அறை கண்காணிப்பாளர் உறுதி செய்து கையொப்பம் இட வேண்டும்.இதனைச் செய்யாத தேர்வர்களுக்கு மொத்த மதிப்பெண்ணில் 5 மதிப்பெண் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்புகள் உடைய மாதிரி OMR விடை புத்தகம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/12/omr-instructions.pdf