சிக்ஸரில் சாதனை படைத்த ரஸ்ஸல் - பதிலடி கொடுத்த சென்னை படை
ஐபிஎல் 2018 தொடரின் 5ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் சுனில் நரைன் வழக்கம்போல் அதிரடியில் ஈடுபட்டார். ஆனால், 4 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 12 ரன்கள் எடுத்து விரைவிலேயே வெளியேறினார்.
தொடர்ந்து கிறிஸ் லைன் 22 ரன்களிலும், நிதிஷ் ராணா 16 ரன்களிலும் வெளியேறினர். பிறகு சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராபின் உத்தப்பா 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ரிங்கு சிங் 2 ரன்னில் வெளியேறினார்.
அப்போது கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இந்நிலையில், ஆண்ட்ரே ரஸ்ஸல் களமிறங்கினார். அவர் களமிறங்கியதும் ஆட்டத்தின் போக்கே மாறியது. சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால், சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இதற்கிடையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 36 பந்துகளில் 11 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 88 ரன்கள் எடுத்தார். இதனால், கடைசி 10 ஓவர்களில் 113 ரன்களை கொல்கத்தா அணி குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.
பின்னர் இமாலய ஸ்கோரை எதிர்கொண்டு சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷேன் வாட்சனும், அம்பதி ராயுடுவும் அருமையான தொடக்கத்தை கொடுத்தனர். குறிப்பாக ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடினார். பின்னர் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 42 ரன்கள் குவித்து வெளியேறினார்.
தொடர்ந்து அம்பதி ராயுடுவும் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் அவுட்டானார். அதன் பின்னர் சுரேஷ் ரெய்னா 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் சொந்த மண்ணில் தோனி களமிறங்க சேப்பாக்கம் ஸ்டேடியம் தோனி.. தோனி.. என அதிர்ந்தது.
ஆனால், தோனி பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர் 28 பந்துகளில் வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்து சோதித்தார். இதற்கிடையில் பில்லிங்ஸ் கொல்கத்தா பந்துவீச்சை அடித்து நொறுக்க ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது.
இதனால், கடைசி 2 ஓவர்களுக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், 19.4 ஓவரில் சாம் பில்லிங்ஸ் எதிர்பாரதவிதமாக கேட்ச் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார் அவர் 23 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 56 ரன்கள் எடுத்தார்.
பிராவோ களமிறங்கினார். ஆனாலும், அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால், கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட பிராவோ அதை சிக்ஸராக மாற்றினார். நோ-பாலுக்கு பதிலாக வீசப்பட்ட பந்தில் 2 ரன்கள் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
மூன்றாவது பந்து வைடாக வீசப்பட்டது. அதற்கு பதிலாக வீசப்பட்ட பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். நான்காவது பந்துல் பிராவோ ஒரு ரன் எடுக்க கடைசி இரண்டு பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ஐந்தாவது பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்து அணியை த்ரில் வெற்றிபெற வைத்தார்.
இதனால், ஒரு பந்து மீதம் வைத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த மண்ணில் களமிறங்கிய சென்னை அணி ரசிகர்களை ஏமாற்றாமல் விருந்து படைத்தது. ஆட்ட நாயகன் விருது சாம் பில்லிங்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com