சபரிமலையில் தமிழக பக்தர்களை ஏமாற்றி கொரோனாவுக்கு போலி சான்றிதழ் 3 பேர் கைது
சபரிமலையில் தமிழக பக்தர்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி போலி ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன . கேரளாவில் தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் சபரிமலை வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதங்களில் மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு கொரோனா ஆன்டிஜென் பரிசோதனை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனை நெகட்டிவ் சான்றுடன் தரிசனத்துக்கு சென்றனர். பக்தர்கள் சபரிமலை செல்லும் வழியில் இந்தப் பரிசோதனையை நடத்த பல இடங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
சபரிமலை அருகே உள்ள நிலக்கல் என்ற இடத்திலும் இதற்கான வசதி செய்யப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் போலீசார், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட 350க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்தது. ஆனால் இந்த பரிசோதனைக்கான வசதி மிகக் குறைவான இடங்களில் மட்டுமே உள்ளது. மேலும் நிலக்கல் பகுதியிலும் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இது தெரியாமல் நிலக்கல்லில் பரிசோதனை வசதி இருக்கும் என்று கருதி தமிழகம் உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று சபரிமலைக்கு சென்றனர். ஆனால் அங்கு கேரள அரசு சார்பில் பரிசோதனைக் கூட எதுவும் இல்லை என்று அறிந்த பக்தர்கள் கவலையடைந்தனர்.
இதற்கிடையே அப்பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் கொரோனா பரிசோதனைக் கூடம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று பரிசோதனை நடத்தினர். ஒவ்வொருவருக்கும் தலா 2,500 ரூபாய் கட்டணமாக வசூலித்தனர். அங்கு பரிசோதனை நடத்திய சான்றிதழுடன் தரிசனத்திற்கு சென்ற போது தான் அது போலியானது என தெரியவந்தது. அந்த பரிசோதனைக் கூடத்திற்கு முறையான அனுமதி இல்லை என்றும் தெரிந்தது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நிலக்கல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி அங்கு பணியில் இருந்த 3 ஊழியர்களை கைது செய்தனர். பின்னர் பக்தர்கள் கோட்டயத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு சென்று பரிசோதனை நடத்திய பின்னர் இன்று தரிசனத்திற்கு சென்றனர்.